இந்த மாதம் 14ம் தேதி இரவு 8 மணிக்கு கிளம்பிய வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸில் எங்களின் சித்தூர் பயணம் தொடங்கியது.  லேசான தூறலுடன் கிளம்பிய எங்கள் பயணம் நடு இரவில் நல்ல மழையுடன் தொடர்ந்தது. காலை சுமார் 9 மணிக்கு சித்தூரை அடைந்தோம்.  அங்கிருந்து வாடகைக் கார் ஏற்பாடு பண்ணிக்கொண்டு 12 கிமீ தூரத்திலுள்ள காணிப்பாக்கம் என்ற சிற்றூரை அடைந்தோம்  இங்கு வரசித்தி விநாயகர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.  விநாயகர் சிலை கண்டெடுத்த கிணறு இப்போதும் உள்ளது.  இங்கிருந்து எடுக்கப்படும் நீர் தான் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.
இத்தலம் பரிகாரத்தலமாகவும் வேண்டுதல் தலமாகவும் விளங்குகிறது.
இவ்வாலயத்தில் தினமும் மாலை “சத்தியப்பிரமாணம்’ நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கடன் வாங்கி ஏமாற்றியவர்கள், பெண்களை ஏமாற்றியவர்கள் என எந்தக்குற்றம் செய்தவர்களாக இருந்தாலும் இங்கு நடைபெறும் “சத்தியப்பிரமாணம்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விநாயகர் முன் சத்தியம் செய்தால் அதிலிருந்து தப்பிக்க முடியாது. தொன்னூறு நாட்களில் பொய் சொன்னவர் தண்டிக்கப் படுவர் என மக்கள் நம்புகின்றனர்.
அதற்கு அருகிலேயே ஒரு சிவன் கோவிலும் உள்ளது. இரண்டையும் தரிசனம் செய்து கொண்டு சுமார் ஒன்றரை மணிக்கு வேலூரை அடைந்தோம். மதிய உணவை சரவணபவனில் முடித்துக்கொண்டு நாங்கள் தங்க வேண்டிய ஹோட்டலை அடைந்தோம். சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொண்டோம்
இந்திய நகரங்களில் வேலூர் வரலாற்று சிறப்புமிக்க நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது.முதல் சிப்பாய் கலகம் வேலூர் கோட்டையில்தான் நடைப்பெற்றதாக வரலாறு குறிப்பிடுகிறது.பொம்மி நாயக்கர்,ஆர்க்காட்டு நவாப் உள்ளிட்ட மன்னர்கள் வேலூரை ஆட்சி செய்திருக்கிறார்கள் வேலூரில் இருந்து 7கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது அரியூர்.இங்கு ஸ்ரீமா-சாஸ்த்திரி ஒப்பந்தத்தில் நாட்டை விட்டு சென்ற மலைநாட்டு தமிழர்கள் ஆயிரக்கணக்கில் வாழ்ந்து வருகிறார்கள்.அரியூர் என்பதைவிட சிலோன்காரன் ஊர் என்றாலே எல்லோருக்கும் தெரிந்து விடுகிறது.இங்குள்ள மலைக்கோடி என்ற இடத்தில்தான் பொற்கோவில் அமையப்பெற்றுள்ளது.   பொற்கோவில் அமையப்பெற்றுள்ளதால் அந்த இடத்திற்கு ‘ஸ்ரீபுரம்’என்ற புதிய பெயரும் சூட்டப்பட்டுள்ளது.1500 ஏக்கர் பரப்பளவுள்ள கோயில் நிலத்தில் மொத்தமாக நூறு ஏக்கர் பரப்பளவில் கோயில் நட்சத்திர வடிவில் அமைந்திருக்கிறது  மலைக்கோடி ஒரு காலத்தில் ஆள் அரவமற்ற காடாக இருந்ததாம்.அங்குதான் சித்தர்களும்,யோகிகளும் தியானம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

அதே இடத்தில் நாராயணியை நினைத்து சக்தி அம்மா தியானம் செய்து அம்மனின் அருளைப்பெற்று தங்கக் கோயில் அமைத்தார்  ஆயிரத்து ஐந்நூறு கிலோ தங்கத்தால் நிர்மாணிக்கப்பட்டுள்ள இக் கோவிலை சுற்றிலும் சிறிய அகழி அமைக்கப்பட்டுள்ளது.கோவிலில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீநாராயணி அம்மனை தரிசிக்க வேண்டுமென்றால் கோவிலை சுற்றியுள்ள நட்சத்திர வடிவத்தில் சுமார் இரண்டு கிலோ மீட்டர்  தூரத்திற்கு பயணிக்க வேண்டும்.
நவீன முறையில் கூரை அமைக்கப்பட்டு நிலத்திற்கு மாபிள்,கிறைனைட்  கல் பதிக்கப்பட்டு மிகவும் நேர்த்தியான முறையில் கோவில் அமைக்கப்பட்டுள்ளது.களைப்புக்கு குளிர்பாணம் அருந்த இடைக்கிடையே குளிர்பான கடைகளும் உள்ளன.கோயிலின் இரு பக்கங்களிலும் அடர்ந்து வளர்ந்த மரங்கள்,தரையை போர்த்தியிருக்கும் பச்சை புல்வெளி, நீர் வீழ்ச்சி என்று சொர்க்கப்புரியாகவே ஸ்ரீபுரம் காட்சியளிக்கிறது  சொர்க்கபுரி என்று கதைகளில் படித்திருக்கிறோமே,அதை நிஜத்தில் பார்க்க வேண்டும் என்றால் வேலூருக்கு தான் வரவேண்டும்
பொற்கோவிலின் கொள்ளை அழகை ரசிக்கவே உலக முழுவதிலிருந்தும் சகல மதத்தினரும் வருகை தருகிறார்கள்.இங்கு வரும் பக்தர்கள்,பார்வையாளர்களில் குறிப்பாக தமிழர்களைவிட வெளி மாநிலத்தவர்களே அதிகமாக வருகை தருவதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது. காலை 7மணி முதல் இரவு 8மணி வரை திறந்திருக்கும் பொற்கோவிலில் தினமும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.இரண்டாயிரம் ஆண்டில் தொடங்கிய பொற்கோவிலின் கட்டுமான பனிகள் 2007 ஆம் ஆண்டில்தான் முடிவடைந்திருக்கிறது     ஜொலிக்கும் நாராயணியை கண்ணார தரிசித்தபின் அங்கேயே உள்ள நாராயணனையும் தரிசித்துக்கொண்டு [ சனிக்கிழமை விஷ்ணு தரிசனம் ] வெளியே வந்து வேலூர் கோட்டையை சுமார் 7 மணிக்கு அடைந்தோம்.  கருங்கல்லால் கட்டப்பட்ட அழகிய இக் கோட்டை இதன் பாரிய மதில்கள்அகழி மற்றும் உறுதியான கல் கட்டுமானங்களுக்குப் பெயர் பெற்றது. ஒரேயொரு வாயில் கொண்ட அமைப்பில் கட்டப்பட்டுள்ள இக்கோட்டை 133 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 191 அடி அகலமும் 29 அடி ஆழமும் கொண்ட அகழி இக்கோட்டையைச் சுற்றிலும் அமைந்துள்ளது. இக் கோட்டைக்குள் ஒரு இந்துக் கோயில்கிறித்தவ தேவாலயம், பள்ளிவாசல் எனபலவும் உள்ளன.
மூலவர் சன்னதியின் முன்பாக கொடி மரம் மற்றும் பலிபீடம் ஆகியவை காணப்படுகின்றன. அருகில் நந்திதேவர் உள்ளார். இங்குள்ள மூலவர் ஸ்வரகண்டேஸ்வரர் என்றும், ஜலகண்டேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகின்றார். இங்குள்ள இறைவி அகிலாண்டேஸ்வரி என்றழைக்கப்படுகிறார்.  அம்மன் சன்னதி சுவர்களில், விநாயகர், மாதேஸ்வாி, வைணஷ்ணவி, பிராஹி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வ விக்ரகங்கள் எழிலோடு பதிக்கப்பட்டுள்ளன. அம்பாள் சன்னதியின் இருபுறமும் கம்பீரமாக துவாரபாலகியர் உள்ளனர்.  பகலில் போயிருந்தால் அந்தக் கோட்டையின் அழகை இன்னும் துல்லியமாக பார்த்து ரசித்திருக்கலாம்.  புகைப்படங்கள் எடுத்துக்கொண்டபின் சுமார் இரவு ஒன்பது மணிக்கு எங்கள் இரவு உணவை முடித்துக்கொண்டு ஹோட்டலுக்கு திரும்பினோம்.
இரவு உணவுக்கு மீண்டும் சரவணபவனுக்கே போனோம்.  அங்கு ஒரு சர்வர் மிகவும் சிரித்த முகத்துடனும் மிகவும் சினேக பாவத்துடனும் பரிமாறியது மனதிற்கு மிகவும் இதமாக இருந்தது.   முடிந்து வெளியே வரும்போது நாங்கள் கொடுத்த டிப்ஸையும் வாங்க மறுத்துவிட்டார். தங்களுக்கு நல்ல பேட்டா கிடைக்கிறது என்றும் சரவணபவன் அவர்கள் நலனை மிக நன்றாக கவனிக்கிறது எனவும் ஏதாவது கொடுக்க நினைத்தால் அதனை அவர்கள் திரு கிருபானந்தவாரியாருக்கு கோவில் கட்ட வைத்திருக்கும் உண்டியலில் போடச் சொன்னது எங்களுக்கு மனதிற்கு நிறைவாக இருந்த்து.  இந்த காலத்திலும் இப்படி ஒரு நேர்மையான மனிதரை சந்தித்த சந்தோஷத்துடன் ஹோட்டலை அடைந்தோம்.