ராகு– கேது தோஷம் போக்கும் தலம்இங்குள்ள நாக நாதருக்கு பாலாபிசேகம் செய்யும் போது அந்த பால் சிலையில் பட்டவுன் நீல நிறமாக மாறும்.
நான்கு யுகங்களைக் கண்ட ஆலயம், நாகராஜன்– நாகக் கன்னிகைகள் வணங்கி வழிபட்ட தலம், ராகு– கேது தோஷம் போக்கும் தலம், திருமணப்பேறு மற்றும் குழந்தைப்பேறு அருளும் இறைவன் என்பது உள்ளிட்ட பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாக நாகநாத சுவாமி திருக்கோவில் திகழ்கிறது. இந்த ஆலயமானது, புதுக்கோட்டை மாவட்டம், பேரையூரில் வெள்ளாற்றங்கரைக்கு தெற்கே அமைந்துள்ளது.புராண வரலாறு
பதினெட்டு தீவுகளுக்கும் மன்னனாக விளங்கிய சலேந்திரன் என்பவன், நாள்தோறும் சிவபூஜை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். யாரும் இல்லாத வேளையில் தினந்தோறும் நாகக்கன்னிகளும் இந்த இறைவனுக்குப் பூஜை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
ஒரு சமயம் சலேந்திரன், நாகக் கன்னிகளில் ஒருத்தியைக் காண நேர்ந்தது. அவள் அழகில் மயங்கிய மன்னன், அவள் மீது காதல் கொண்டான்.
இதனால் இறைவன் கட்டளைப்படி, நாக லோகத்தில் வாழும் நாகராஜனுக்கு மகனாகப் பிறந்து நாக கன்னிகையை மணந்து வாழ்ந்தான். எனினும் சிவபூஜையை அவன் தொடர்ந்து செய்து வந்தான். அவனுக்காக ஆலய புஷ்கரணியில் பிலத்துவாரத்தின் வழியே நாக கன்னிகைகள் பூலோகத்துப் பேரையூர் வந்து பூப்பறித்துச் சென்றனர்.
இடைவிடாத பூஜைகளினால் மனம் மகிழ்ந்த இறைவன், சலேந்திரனை அழைத்துவர நந்தியெம்பெருமானிடம் கேட்டுக்கொண்டார். இதனை அறிந்த நாகராஜனும் புஷ்கரணி பிலத்துவாரத்தின் வழியே பேரையூருக்கு உடன் வந்தான். அங்கு தோன்றிய இறைவனைத் தன்னுடைய நாகலோகம் வந்து நடனமாட வேண்டும் என வரம் கேட்டான். அதன்படியே இறைவன், வாத்திய இசையுடன் நடனமாடினார். அந்த இசை பேரையூர் புஷ்கரணியில் ஒலித்தது. அதன்பின் ஆண்டுக்கு ஒருமுறை இந்நடனத்தை பங்குனி மாதத்தில் நிகழ்த்தி வந்தார். இதை நிரூபிக்கும் வகையில், இன்றும் பங்குனி–சித்திரை மாதத்தில் ஒருநாள் புஷ்கரணியில் இசை முழக்கம் கேட்பதாக ஆலய அர்ச்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
கல்வெட்டுகள்
இந்த ஆலயம் மிகவும் பழமையும், பெருமையும் வாய்ந்தது என்பதற்கு இத்தலத்தின் அமைப்பும், கோவிலில் அமைந்துள்ள கல்வெட்டுகளுமே சான்றாக உள்ளன.
கி.பி. 1907–ம் ஆண்டு தொல்லியல் ஆய்வறிக்கையின் பத்தொன்பது கல்வெட்டு மூலம், பரகேசரிவர்மன் (கி.பி.1012), முதலாம் குலோத்துங்கன் (கி.பி.1106), முதலாம் சுந்தர பாண்டியன் (கி.பி.1218–1229), மூன்றாம் ராஜராஜன் (கி.பி.1236), விக்கிரம பாண்டியன், குலசேகரத்தேவன் (கி.பி.1218), முதலாம் குலசேகரன் (கி.பி.1287–1300) முதலான மன்னர்கள் இந்த ஆலயத்திற்கு திருப்பணி செய்ததை அறிய முடிகிறது. மேலும், இவற்றின் மூலம் ஆலயத்திற்கு வழங்கப்பட்ட கொடைகள், நிலதானம், கால்நடை தானம் போன்றவற்றையும், சமுதாயத்து பழக்க வழக்கங்கள், வழக்குகள் அதன் மீதான தீர்ப்புகள் முதலியவையும் அறியப்படுகிறது.
ஆலய அமைப்பு
கிழக்கு நோக்கி அமைந்துள்ள இவ்வாலயத்தின் எதிரே மிகப்பெரிய திருக்குளம் அமைந்துள்ளது. ஆலயத்தின் மதில் சுவர்களிலும் ஏராளமான கல் நாகர்கள் அணி அணியாய் அமைந்திருப்பது நம் கண்ணுக்கு விருந்தாகவும், வியப்பாகவும் அமைந்துள்ளது. வியந்தபடி மேற்கே நடந்தால், பிரம்மாண்டமான துவாரபாலகர்கள் ராஜகோபுர வாசலில் காவல் நிற்கின்றனர்.
ராஜகோபுர நுழைவு வாசலைத் தாண்டினால், பலிபீடம், கொடிமரம், நந்திதேவர் அமர்ந்த மண்டபமும் அமைந்துள்ளன. அதன் அருகே, ஓங்கார வடிவில் பிலத்துவாரம் கொண்ட புஷ்கரணி அமைந்துள்ளது. அதன் சுவர் மீதும் அழகிய கல் நாகர்கள் அணி வகுத்து அமர்ந்துள்ளனர். இந்த சுனையின் கரையில் சூலம் ஒன்று செதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடும் அளவிற்கு நீர் மட்டம் உயரும் போது, பல்வேறு மிருதங்க ஓசை கேட்பதாக பக்தர்கள் கூறுகின்றனர். இது பங்குனி மற்றும் சித்திரை மாதத்தில் தொடர்ந்து நிகழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது.
புஷ்கரணி அருகே கல் நடராஜர், சிவகாமி அம்மையும் காட்சி தருகிறார்கள். அதன் அருகே விநாயகர் சன்னிதி அமைந்துள்ளது. அதனை அடுத்து சுமார் 4 அடி உயர நாகராஜர் சிலை காணப்படுகிறது. பரிகாரங்கள் அனைத்துமே இவருக்கு மட்டுமே செய்யப்படுகிறது. இதன் அருகே தனிச் சன்னிதியில் ரிஷப தேவர் மீது இறைவனும், இறைவியும் சிலா வடிவில் அருள்வது கண்கொள்ளாக் காட்சியாகும்.
இதன் இடதுபுறம் வள்ளி–தெய்வயானை சமேத ஆறுமுகப்பெருமான் சன்னிதி இருக்கிறது. அதனை அடுத்து தனிச் சன்னிதியில் பெரியநாயகி எனும் பிரகதாம்பாள் கிழக்கு முகமாய் நின்ற கோலத்தில் எழிலுடன் காட்சி தருகின்றாள். அம்மன் சன்னிதி எதிரே தனி கொடி மரமும், அதன் அருகே பைரவர் சன்னிதியும் அமைந்துள்ளன. இறைவி சன்னிதியின் எதிரே நவக்கிரக சன்னிதி உள்ளது. இதன் தனிச்சிறப்பு அனைத்துக் கிரகங்களும் சூரியனை மட்டுமே வணங்கி நிற்பது ஆகும்.
ஆலயத்தை வலம் வந்தால், கருவறை சுவரில் விநாயகர், அதன் அடிப்பகுதியில் வளர்ந்து வரும் சுயம்பு லிங்கம் காணப்படுகிறது. கன்னி மூலை கணபதி, லிங்கோத்பவர், துர்க்கை, சண்டிகேஸ்வரர், சண்டிகேஸ்வரி ஆகியோர் விக்கிரகங்களும் உள்ளன.
இத்திருக்கோவிலின் மற்றொரு சிறப்பு, ஆலயத்தின் வெளிப்புறம் சற்றுத் தொலைவில் நான்கு திசைகளிலும் கிழக்கே இரட்டை விநாயகர், தெற்கே பொய்யாத விநாயகர், மேற்கே தேவ விநாயகர், வடக்கே தொடுவாய் விநாயகர் என நான்கு புறமும் காவல் தெய்வங்களாக அமைந்திருப்பது அரிதான சிறப்பு அம்சமாகும்.
விழாக்கள்
ஆண்டுதோறும் பங்குனி மாதம் கடைசி வாரத்தில் தொடங்கி சித்திரை முதல் வாரம் வரை நாகநாதசுவாமிக்கு பிரம்மோற்சவம் நடைபெறும். தமிழ்ப் புத்தாண்டுக்கு முதல் நாள் தேர்த்திருவிழா நடைபெறும். இது தவிர, ஆடிப்பூரத்தில் பெரியநாயகி அம்பாளுக்கு 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும்.
ராகு–கேது தோஷத்திற்கு பரிகாரத் தலமாக விளங்குவதால், இங்கே விநாயகர் சதுர்த்தி, பிரதோஷம், கிருத்திகை போன்ற விழாக்களுக்கு முக்கியத்துவம் இல்லை.
காலை 7.30 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4.15 மணி முதல் 7 மணி வரையிலும் இறைவனை தரிசிக்க கோவில் நடை திறந்திருக்கும். தலமரம் பின்னை மரம், ஓங்கார சுனை மற்றும் சிவகங்கை தீர்த்தம் ஆகிய இரண்டும் தலத் தீர்த்தங்களாகும். புதுக்கோட்டை சமஸ்தானத்து ஆலயமான இத்திருக்கோவிலை, இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் செய்து வருகிறது.
அமைவிடம்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டத்தில், புதுக்கோட்டையில் இருந்து தென்மேற்கே 15 கிலோமீட்டர் தொலைவில் வெள்ளாற்றிற்கு தெற்கே, பேரையூரில் இக்கோவில் அமைந்துள்ளது. புதுக்கோட்டை– பொன்னமராவதி வழித்தடத்தில் பேரையூர் விலக்கு நிறுத்தத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து ஆட்டோ மூலம் 2 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து ஆலயத்தை அடையலாம்.
புதுக்கோட்டை– மதுரை வழித்தடத்தில், புதுக்கோட்டைக்குத் தெற்கே 10 கிலோமீட்டர் தொலைவில் நமண சமுத்திரம் கூட்டு ரோடு வரும். அங்கிருந்து தென்மேற்கே 5 கிலோமீட்டர் தொலைவில் பேரையூர் அமைந்துள்ளது. திருச்சியில் இருந்து தெற்கே 50 கிலோமீட்டர் தூரத்திலும், மதுரையில் இருந்து வடக்கே 100 கிலோமீட்டர் தொலைவிலும் பேரையூர் திருத்தலம் உள்ளது.
ராகு–கேது தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டுச் சென்றபின், அவர்களுக்கு தடையின்றி நற்செயல்கள் நடைபெறுவது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகவே உள்ளது.
பரிகாரத் தலம்
இந்த தலம் ராகு–கேது தோஷம் நீக்கும் கண்கண்ட தலமாக விளங்குகிறது. இத்தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களின் திருமணத் தடை நீங்கவும், குழந்தைப்பேறு வரமருளவும், சக்தி மிக்க தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது. இதற்கு இத்தலத்தில் நிறைந்திருக்கும் எண்ணற்ற கல் நாகர்களே சாட்சி.
தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கோவிலின் எதிரே உள்ள திருக்குளத்தில் மூழ்கி எழுந்து நாகர் சிலையையும், பால், தேங்காய் அர்ச்சனை முதலியவற்றுடன் நாகராஜனுக்கு, நாகர் சிலைக்கும் ராகுகாலங்களில் அபிஷேகம் செய்து, நாகநாதரையும், பெரிய
நாயகியையும் வணங்குகின்றனர். அதன்பின் தான் கொண்டு வந்த நாகரை ஆலயத்திற்கே அர்ப்பணம் செய்துவிட்டு பரிகாரத்தை நிறைவு செய்கின்றனர். வசதியுள்ளவர்கள் ஆலயத்திலே தனியே யாகம் வளர்த்து கல் நாகரை அர்ப்பணிக்கின்றனர். வியாழக்கிழமை மட்டும் ராகுகால பூஜை இல்லை.
குழந்தைப்பேறு வேண்டுவோர் பட்டுத்துணியைக் கல் வைத்து முடித்து அதைத் தலமரத்தில் கட்டி விடுகின்றனர். திருமணதோஷ நிவர்த்திக்கு வரும் பெண்கள் அம்மனை வழிபட்டு மஞ்சள் கயிறை நாகர் மீது கட்டி விடுகின்றனர்.வாழ்க வளமுடன்,
No comments:
Post a Comment