Saturday, September 17, 2016

தேனில் கலந்திருப்பதாகக் கண்டறியப்பட்ட ஆன்டிபயாடிக்குகள்:ஆக்ஸி டெட்ராசைக்கிளின், ஆம்ப்பிசிலின், எரித்ரோமைசின், குளோரம்பினிகால், சிப்ரோப்ளாக்சசின், என்ரோப்ளாக்சசின்பரிசோதனையில் அதிக அளவு ஆன்டிபயாடிக் கலந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ள தேன் கம்பெனிகள்:
டாபர்,
ஹிமாலயா,
பதஞ்சலி ஆயுர்வேதா,
பைத்தியநாத்,
காதி
அடப்பாவிகளா தேனுக்கும் பிரச்சனையா?
தேன் என்றாலே சுத்தமானது, இயற்கையாகக் கிடைக்கக் கூடியது என்று நம்புகிறோம். அதனாலேயே குழந்தைகளுக்கும் நோயாளிகளுக்கும் தரப்படுகிறது. சித்த, ஆயுர்வேதமருத்துவங்களில் தேனே ஒரு மருந்தாகவும் உள்ளது. வீடுகளில் இருக்கும் பாட்டிவைத்தியத்திலும் தேனே முதன்மை வகிக்கிறது. இப்படி நம் அன்றாட வாழ்க்கையில் தேனுக்கு எப்போதும் இடம் உண்டு.
இப்போது அந்தத் தேனுக்கும் பிரச்சனை வந்து விட்டது. அது என்னவென்றால் மார்க்கெட்டுகளில் கிடைக்கும் தேனில் ஆறு வகையான ஆன்டிபயாடிக் எனப்படும் மருந்துகள் அதிக அளவில் கலந்திருந்தது என்று சென்டர் பார் சைன்ஸ் அன்ட் என்விரான்மென்ட் Centre for Science and Environment(குளிர்பானங்களில் அதிக அளவில் பூச்சிமருந்துகள் கலந்திருப்பதைக் கண்டறிந்தவர்கள் இவர்களே) அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
தேனில் ஏன் ஆன்டிபயாடிக் கலந்திருக்கிறது? அதனால் வரும் பிரச்சனைகள் என்னென்ன? கொஞ்சம் விலாவாரியாக பார்ப்போமா?
பெரிய பெரிய கார்ப்பரேட் கம்பெனிகள் தேனையும் நவீன பேக்கிங்கில் விற்கிறார்கள். இவர்கள் யாரும் காட்டில் இயற்கையாகக் கிடைக்கும் தேனை எடுத்து விற்பதில்லை. அது சாத்தியமும் இல்லையென்பதால், தேனீக்களை பெரிய அளவில் வளர்த்துத் தேனை அறுவடை செய்பவர்களிடம் இருந்து வாங்குகிறார்கள். அல்லது தாங்களே அப்படி ஒரு பண்ணை வைத்துக்கொள்கிறார்கள். இவ்வாறு தேனீக்கள் செயற்கையான் சூழல்களில் வளர்க்கப்படும் போது அவற்றுக்கு நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. (கோழிப்பண்ணைகளிலும் இதே போல் ஆன்டிபயாடிக் ஊசிகள் போடப்படுகின்றன). இதுதான் தேனில் ஆன்டிபயாடிக் மருந்துகள் கலந்திருப்பதற்குக் காரணம்.
எந்த அளவு வரை அதிகபட்சமாக ஒவ்வொரு ஆன்டிபயாடிக் மருந்தும் தேனில் இருக்கலாம் என்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வரையரை வைத்துள்ளன. அந்த அளவுக்கு மேல் ஆன்டிபயாடிக் இருந்தால் அது தேனை சாப்பிடுபவர்களுக்குப் பாதுகாப்பானதல்ல. அத்தகைய தேனை அந்த நாடுகளும் அனுமதிப்பதில்லை. இந்தியாவில் தேன் தயாரிக்கும் கம்பெனிகள் இந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொழுது இந்தக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டே தேன் தயாரிக்கின்றார்கள். ஆனால் பிரச்சனையே அவர்கள் இந்தியச் சந்தைக்கு வரும்போதுதான். இந்தியச் சந்தை என்று வரும்போது வழக்கம்போல எல்லாக் கம்பெனிகளும் செய்வது போல அவர்கள் தரம் குறைந்த மற்றும் ஆன்டிபயாடிக் அளவு அதிகம் உள்ள தேனையே விற்கிறார்கள். இத்தேனை அவர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பியிருப்பார்களேயானால் அது நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பபட்டு விடும். ஆனால் இந்தியாவில் தேனிற்கென்று எந்தவிதமான பாதுகாப்பு வரைமுறைகளும் சட்டங்களோ இல்லாததால் கம்பெனிகள் வேறு நாடுகளில் விற்க முடியாததை நம்தலையில் கட்டுகின்றார்கள்.
சமீபத்திய பரிசோதனை முடிவு இந்தியாவின் எல்லாப் பெரிய கம்பெனிகளின் தேனிலும் ஆன்டிபயாடிக் மருந்துகள் மிக அதிக அளவு உள்ளதாகத் தெரிவிக்கிறது. இதில் இரண்டு வெளிநாட்டுக்கம்பெனிகளும் அடக்கம் (உள்ளூர்க்காரனுக்கே நம்மளப் பத்தி அக்கரையில்லைன்னா அப்புறம் வெளிநாட்டுக்காரன் சும்மாவா இருப்பான்?). அந்த வெளிநாட்டுக்கம்பெனிகளின் தேன் முதலில் அவர்கள் நாட்டு விதிமுறைகளின்படியே பயன்படுத்தக்கூடாத ஒன்றாக இருக்கிறது. அவர்கள் அதைத் தம்நாடுகளில் விற்கவே முடியாது. அதனால் இதுக்கென்றே இருக்கும் நம் நாட்டுச் சந்தைகளுக்குத் தள்ளிவிடுகிறார்கள்.
இப்படி அதிக அளவு ஆன்டிபயாடிக் கலந்த தேனை நாள்பட சாப்பிடுவதால் இரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், சிறுநீரகம், ஈரல் பிரச்சனைகளும் ஏற்படலாம். மேலும், நம் உடம்பிலேயே அந்த ஆன்ட்டிபயாடிக்குகள் இருந்து கொண்டிருப்பதால், தேவையான சமயத்தில் கொடுக்கபடும் போது அவை செயற்படாது போகலாம். (சூப்பர் பக் கிருமிகள் இந்தியாவில் அதிக அளவில் காணப்படுவதற்கு இதுபோன்ற காரணங்கள் இருக்கக்கூடும்).
வெளிநாட்டுக்கம்பெனிகளை இந்தியாவில் அனுமதிக்கத் தொடங்கியபிறகு, இந்தியக் கம்பெனிகளும் சரி, வெளிநாட்டுக்கம்பெனிகளும் சரி, இரட்டைத் தரக் கொள்கையைக் கடைப்பிடிப்பதாகவே தெரிகிறது (நம்ம இரட்டை குவளை சிஸ்டம் ஞாபகம் வந்தா அதுக்கு நான் பொறுப்பு கிடையாதுங்கோ). அதாவது, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு ஒரு தரம், உள்நாட்டுச் சந்தைக்கு ஒருதரம் என்று கம்பெனிகள் நேரடியாகவே நம்மை ஏளனம் செய்கின்றன. இதில் சில கம்பெனிகள் எக்ஸ்போர்ட் குவாலிட்டி என்று விளம்பரம் செய்து விற்பது கேவலத்தின் உச்ச கட்டம்! எக்ஸ்போர்ட் குவாலிட்டிக்கு இந்தியர்கள் தகுதியில்லை என்று ஒருமனதாக எல்லோரும் முடிவு செய்துவிட்டார்கள். இதில் பெரும்பாலும் அனைத்து இந்தியக் கம்பெனிகளும் அடக்கம் என்பதுதான் நம் தேசப்பற்றின் நிஜமான முகம்!. இங்கே பணம் கிடைக்கிறது என்றால் எதுவுமே தவறில்லை! உணவில் கலப்படம், பாலில் கலப்படம், சிமென்ட்டிலும் கலப்படம், ....எங்கும் கலப்படம், எதிலும் கலப்படம்! வாழ்க ஜனநாயகம்! வளர்க பணநாயகம்! ஓங்குக வாரிசுரிமை!
பின்குறிப்பு:
தேனில கலந்திருப்பதாகக் கண்டறியப்பட்ட ஆன்டிபயாடிக்குகள்:
ஆக்ஸி டெட்ராசைக்கிளின், ஆம்ப்பிசிலின், எரித்ரோமைசின், குளோரம்பினிகால், சிப்ரோப்ளாக்சசின், என்ரோப்ளாக்சசின்
பரிசோதனையில் அதிக அளவு ஆன்டிபயாடிக் கலந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ள தேன் கம்பெனிகள்:
டாபர், ஹிமாலயா, பதஞ்சலி ஆயுர்வேதா, பைத்தியநாத், காதி (சமீபத்தில் டாபர் கம்பெனி தரம்குறைந்த தேனை விற்பதாக நேபாளத்தில் பிரச்சனை எழுந்த பொழுது, அது இந்தியக் கம்பெனிகளைக் குறிவைத்துச் செய்யப்படும் அவதூறுப் பிரச்சாரம் என்று டாபர் கம்பெனி சமாளித்தது நினைவில் இருக்கலாம்)

No comments:

Post a Comment