முதலில் ஜோதிடம் என்பது வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டி. எதிர்காலம் என்னும் பாதையின் மேடு பள்ளங்களை, நேரான, வளைவு மற்றும் திருப்பங்களை நமக்கு காட்டும் எச்சரிக்கை பலகை.
நமது கர்மத்தின் அடிப்படையிலேயே நம் வாழ்க்கை அமைகிறது. கர்மம் என்பது ஒருவர் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியம்.
ஜனனீ ஜன்ம சௌக்யானாம் வர்த்தனீ குல சம்பதாம்
பதவீ பூர்வ புண்யானாம் லிக்யதே ஜன்மபத்ரிகா.
அப்படியானால் அவரவர் செய்த செயல்களே கஷ்ட சுகங்களுக்கு காரணம் என்றாகிறதல்லவா? நம் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்று ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டதா? நம்மை இதைத்தான் செய்ய வேண்டும் என்று தலையில் எழுதிவைத்துவிட்டு அதன் படியே நம்மை செயல்படவும் வைத்துவிட்டு அந்த கர்மத்தையும் நம்மையே அனுபவிக்க சொல்கிறதா இந்த விதி? (அ) கிரகம்? (அ) கடவுள்?
நிச்சயமாக இருக்காது. முற்பிறவியில் பாவம் செய்திருந்தால் அதனால் அதன் பலனான கஷ்டங்களை அனுபவித்துக்கொண்டு, அதை திருத்திக்கொண்டு, இப்பிறவியில் நல்லதை செய்யவே நாம் படைக்கப்பட்டிருக்கிறோம். ஒருவன் இன்று காலை எழுந்தவுடன் காபி குடிப்பானா? (அ) டீ குடிப்பானா? குளிப்பானா? குளிக்க மாட்டானா? போன்ற எல்லாவற்றையுமா நம்மை படைத்தவன் எழுதி வைத்திருப்பான்? அப்படியானால் ஒரு மனிதன் இன்னின்ன தீமைகள் செய்வான் என்றும் அவன்தானே எழுதியிருக்க வேண்டும். எல்லாவற்றையும் அவனே எழுதி வைத்துவிட்டு, அதன்படி செய்யவும் வைத்துவிட்டு, பலனை (அந்த கர்மத்தை?) மட்டும் மனிதனையே அனுபவிக்க சொல்கிறானா இறைவன்?
காபி குடிப்பதா (அ) டீ குடிப்பதா? என்று தேர்ந்தெடுக்கும் உரிமையை இறைவன் நமக்கு அளித்துள்ளான். அதைப்போல்தான் நல்லதையோ, கெட்டதையோ எதை செய்யும் உரிமையையும், சுதந்திரத்தையும் இறைவன் அளித்துள்ளான். நமக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. ஆராய்ந்து பார்க்கும் அறிவையும் கொடுத்துள்ளான். அதில் ஏதாவது ஒன்றை நாம்தான் தேர்ந்தெடுக்கிறோம்.
நாம் எதை தேர்ந்து எடுக்கிறோமோ அதற்கு நாமே பொருப்பாகிறோம்.
அதனால் ஏற்படும் விளைவுகள்களுக்கும் நாமே காரணமாகிறோம்.
கர்மம் என்பது சில அடிப்படை விதிகளோடு நம்மை படைத்துள்ளது.
நமது வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான பாக்கியங்களில் சிலவற்றில் பணம், படிப்பு, அப்பா, அம்மா, உடன்பிறப்பு, உறவு, நட்பு, புகழ், திருமணம், குழந்தைகள், தொழில், ஆரோக்கியம், நீண்ட ஆயுள், போன்றவைகளில்ஏதோ ஒன்றோ (அ) பலதோ அமையாமல் போகலாம். (அ) சிலது அமைந்ததாலேயே பிரச்சனைகளும் உருவாகலாம். ஒன்று மட்டும் நிச்சயம். குறை இல்லாதவர் எவருமில்லை. இதை ஜாதகத்தின் மூலம் ஓரளவுக்கு தெரிந்தும் கொள்ளலாம். ஓரளவுக்கு என்று நான் சொல்ல காரணம் இருக்கிறது. எது முற்றிலும் நமக்கு நிராகரிப்பட்டது என்று தீர்மானிக்கும் அதிகாரம் யாருக்குமில்லை.
(ஒரு ஜோதிடன் என்ன நடக்கும் என்று கோடிட்டுக் காட்டலாமேயன்றி, இதுதான் நடக்கும் என்று அறுதியிட்டோ அல்லது சவால்விட்டோ சொல்லக்கூடாது.
ஜோதிடத்தின் முதல் விதி இதுதான்.
கோர்ட்டில் ஒரு குற்றவாளிக்கு, அவன் செய்த ஏதோ ஒரு குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனை தருகிறார்கள். ஜெயிலில் இருக்கும் காலங்களில் அவன் தன் தவறை உணர்ந்து, திருந்தி நல்லபடியாக இருந்தால் தண்டனை காலத்தை குறைக்கிறார்கள். அவனுடைய நன்னடத்தைக்கு உண்டான பலன் அவனுக்கு கிடைக்கிறதல்லவா?
ஒருவேளை அவன் அங்கேயும் திருந்தாமல் மேலும் ஒரு பெரிய குற்றத்தை (கொலை ) செய்தால் என்னவாகும்? ஆயுள் தண்டனையோ அதற்க்கும் மேலோ தண்டனை கிடைக்கும். தண்டனை காலம் குறைவதற்க்கும், அதிகரிப்பதற்க்கும் அவனுடைய செயல்பாடுகளே காரணமாகிறது.
இதில் தீர்ப்பு என்பதே ஜாதகம்.
தண்டனையை நிறைவேற்றும் அரசாங்கமே கிரகங்கள்.
செயல்பாடுகளே (நன்னடத்தை) பரிகாரங்கள்.கெட்ட நடத்தை என்பது பாவங்கள்.
தண்டனையை குறைக்கும் (அ) கூட்டும் நீதிபதிகளே கடவுள்.
ஜாதகம் உண்மை. பரிகாரம் உண்மை. கடவுள் உண்மை. நமது முயற்சிக்கு உண்டான பலன் கிடைக்கும் என்பதும் உண்மையிலும் உண்மை.
இவைகளை புரிந்து கொள்வது சற்று கடினம்.
மொபைலில் கால்ரேட் ஆஃபரை போல.
மஹாபாரதத்தில் சகாதேவன் கூட ஜோதிடன்தான். அவன் துரியோதணனுக்கு சரியான நேரத்தையே குறித்து கொடுத்தான். ஜோதிடம் பலிக்காது என்றால் கிருஷ்ணர் ஏதும் அதற்கு மாற்று செய்யாமல் விட்டிருப்பாரே? அவர் ஏன் சூர்ய சந்திரரை ஒரே இடத்தில் வரவைத்து ஒரு நாள் முன்னதாக அமாவாசையை உருவாக்கவேண்டும்.
இப்படி யோசியுங்கள். துரியோதணன் தன் எதிரியிடமே சென்று மாபெரும் யுத்தத்திற்கு நேரம் கேட்கிறான். சகாதேவன் கூறிய அதே நேரத்திலேயே பூஜையும் செய்கிறான். அவனுக்கு ஜோதிடத்தின் மேலும், அதை சொல்பவன் மேலும் எவ்வளவு நம்பிக்கை இருந்திருக்க வேண்டும். ஆனாலும் யுத்தத்தில் தோற்கிறான். அவன் தர்மத்திற்கு எதிராக இருந்ததும், கடவுளின் துணை இல்லாமல் போனதும்தான் காரணம்.
இதைத்தானே, திருஞானசம்பந்தர்,
வேயுறு தோளி பங்கன். ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பு இரண்டும் ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே. என்றும்,
நாள் என் செய்யும் வினைதான் என் செய்யும் எனை நாடி வந்த கோள் என் செய்யும்
பாடலில் அருணகிரிநாதரும் கூறியுள்ளார்கள்.
எல்லாமே தீர்மானிக்கப்பட்டிருந்தால் நமது செயல்கள் அர்த்தமற்றதாகி விடும். நாடகமே உலகம் அதை நடத்துபவன் இறைவன் என்பார்கள். கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். நாம் தினம் தினம் என்னென்ன செய்வோம் என்று அவனே script எழுதி வைத்துவிட்டு, அதன்படியே நடப்பதை வேடிக்கை பார்த்தால் அதிலென்ன சுவாரசியம் இருக்கப்போகிறது
காதலிக்கவில்லை என்பதற்காக ஒரு இளம்பெண் மீது நீ ஆசிட் ஊற்றுவாய் என்று ஒருவன் ஜாதகத்தில் இறைவன் எழுதி வைத்திருப்பானா?
பிஞ்சு குழந்தைகள் 94 பேர் மொத்தமாக பள்ளியில் தீக்கிறையாகி, அலறி துடித்து உடல் வெந்து கருகிப்போவதற்க்கு கிரகங்கள் துணை போகிறதா?
இலங்கையில் படுகொலையாகி சவமான ஒரு பெண்ணிடம், அவள் இறந்ததுகூட தெரியாமல், அவள் குழந்தை பசியால் பால் குடிக்கமடியில் கிடக்கும் காட்சிகள் உருவாக யார் காரணம்?
இந்த நாட்டிலேயே எத்தனை கற்பழிப்புகள்? எத்தனை வன்முறைகள்?
இவைகளை எல்லாம் கிரகங்கள் தூண்டி விடுகின்றதா? அதை ஆண்டவன் வேடிக்கை பார்க்கிறானா?
எல்லாவற்றுக்கும் மனிதனின் பேராசை, வக்ர புத்தி.தீய எண்ணங்கள், சுயநலம், போன்றவைகளே காரணம்.
இறைவன் எல்லாவற்றையும் எழுதி வைக்கவில்லை. நமது முன்வினைப்படி சில பாக்கியங்கள் மறுக்கப்பட்டதை தவிர.
எல்லா விளைவுகளுக்கும் நாமே காரணம்.
நம் முன்னோர்கள் சொன்னார்கள் எண்ணம் போல வாழ்வு என்று. நமது எண்ணங்களும், அதனால் உருவாகும் செயல்களுமே நம் வாழ்க்கையை தீர்மானிக்கின்றன. சில நேரம் நல்லவைகள் நடக்காமல் போகலாம். அதையே கிருஷ்ணர் கீதையில் சொன்னார். கடமையை செய் பலனை எதிர்பாராதே என்று.
ஒருவன் தோற்றுப்போக எந்த ஆதரவும் தேவையில்லை. ஆனால்
வெற்றிபெற பல வழிகளில் யோசித்து, பல ஆதரவை பெறவேண்டி வரும்.
புயல் வீசும், பலத்த மழை வரும் என்று வானிலை எச்சரிக்கை தருவது போல்தான் ஜோதிடம். அப்போதைய நேரம் நமக்கு சாதகமாக இருக்கிறதா, பாதகமாக இருக்கிறதா, என்று பார்த்து நம்மை தயார் படுத்திக்கொள்ள உதவும் ஒரு உன்னத சாஸ்திரம்.
ஜாதகத்தில் நல்லது நடக்கும் என்று இருந்தால் அதற்கு நடப்பதற்கு உண்டான செயல்களை செய்வோம்.
தீயது நடக்கும் என்று இருந்தால் அதை தடுக்க, தவிர்க்க உண்டான செயல்களை செய்வோம்.
ஜாதகத்தை பார்த்து நமது முன்னேற்றத்திற்கு தடை ஏதும் இருந்தால், நம் வசதிக்கேற்ப பரிகாரம் (இறை வழிபாடும், தான தர்மங்களுமே பரிகாரம் என்பது) செய்து கொண்டு இறைவனை வணங்கி, இறைவனின் துணையோடு, நமது எண்ணங்களை தூய்மையாக்கி கொண்டு, தன்னம்பிக்கையோடும், உறுதியோடும் கஷ்டங்களை எதிர்த்து போராடி, வாழ்க்கையில் வெற்றி பெருவோம். (நிம்மதியாக இருப்பதுகூட வெற்றிதான்.) நல்ல செயல்களால் இறைவனின் அனுகிரகத்தை பெருவோம்.
நாட்டாமையிடம் (இறைவன்) தீர்ப்பை (கர்மபலன்) மாற்றி எழுத வைப்போம்.
நமது எண்ணங்களே நமது செயல்கள். நமது செயல்களை பொருத்தே நமது எதிர்காலம். அதை நாமே தீர்மானிக்க முயற்சிப்போம். பலனை எதிர்பாராமல்.